Followers

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Oct 24, 2011

நம்பிக்கை

       

உயிர் கொடுத்து விரல் பற்றி 
நடை பழக்கி நீதியை போதித்த 
தந்தையின் மரணத்தின் 
துயரத்தில் நானும் 
துவண்டுப் போயிருக்கலாம் !

உதிரத்தில் உருவம் கொடுத்து 
வளர்ச்சிக்கு பாலுட்டி 
தாலாட்டில் தமிழ் புகட்டி ...
வாழ்ந்திட வழி காட்டிய ...
அன்னையின் இறுதியுடன் 
நானும் இறுகி போயிருக்கலாம் !

மகிழ்ச்சி ,வீதியிலும் விளையாட்டிலும் 
உண்டென்று 
அழைத்து வந்த நண்பன் 
கவன பிழையில் 
விபத்தில் சிதறியதும் 
நானும் நொருங்கி போயிருக்கலாம் !

சுருட்டி சென்ற சுனாமி 
சிதைத்துப் போட்ட சூறைக்காற்று 
பூமியை புரட்டி போட்ட பூகம்பம் 
நாளைய உணவை 
கேள்வியாக்கிய வெள்ளத்துடன் 
என் துடிதுடிக்கும் இதயமும் 
நின்று போயிருக்கலாம் !

உறவின் பிரிவிலும்
துன்பத் துயரிலும் 
மரணங்கள் உறுதியென 
உணர்ந்த பின்பும் 
நாளைய பொழுதிலாவது 
நன்மைகள் கிட்டாதா...!?
என்ற எதிர்பார்ப்புடன் 
இன்றிரவு தூங்கப்போகின்றேனே 
இதைதான்
நம்பிக்கை என்பதோ ? 
                                            
 16-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசுவில் இடம்பெற்ற எனது ஆக்கம்

Oct 15, 2011

குட்டி இந்தியா (சிங்கப்பூர் தே...க்கா)


தேசம் விட்டு
தேசம் வந்து பொருள்தேடும் எனது
தேச நண்பர்களின் சொர்க்கபூமி!

தேகமும் மனமும்
ரணமாகிபோனதை
நண்பர்களின் நேச தழுவலில்
மறந்திட செய்யும்
மகத்தான இடம்!

தமிழக கிராமங்கள்
தொலைத்த தாவணி...
எங்கும் அரிதாகிப்போன
மூங்கில் குழாய் புட்டு...
விடுதியில் கண்ட
கோபால் பல் பொடி...
வீக்கத்தை தணிக்கும்
தென்னமரகுடி எண்ணையும்
தாராளமாய் கிடைக்கும்
தமிழக சந்தை!

மகிழ்ச்சி துக்கம்
விரோதம் விசாரிப்பு
கொடுக்கல் வாங்கல்
குதூகலம் குடும்பசண்டை
ஊழியர்கள் மத்தியில்
ஞாயிறு தோறும்
கதம்பமாய் கொட்டிக்கிடக்கும்
அதிசய நந்தவனம்!

Sep 22, 2011

நிலையன நினைத்தே!


                                   படதுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லைங்க



                           ருவில் 
                            உயிர் பெற்றதும் 
                            உறுதியாகிவிட்டது 
                            மரணமும் !


                            முதிர்ந்தோ ...
                            முதிராமலோ ,
                            முடிந்து போய்விடும் 
                             வாழ்க்கை !


                             நாம் 
                             விரும்பினாலும் 
                             விரும்பாவிடிலும் 
                             விட்டு வைக்கப்போவதில்லை 
                             முதுமை !


                             உயிரும் நட்பும் 
                             எப்படி பிரியும் 
                             எப்போது பிரியும் 
                             எழுதி வைத்திட முடியவில்லை 
                             எவருக்கும் !


                             பிறப்பும் இறப்பும் 
                             எவரும்மரியாமலே ...
                             எவ்வித பிழையும் மின்றி 
                             சரியாகவே வகுத்திருக்கிறது 
                             இயற்கை !


      
                           ஆனாலும் நாம் ....


                            நிலையற்றதை 
                            நிலையன நினைத்தே 
                            நித்தமும் 
                            தொலைத்து விட்டோம் 
                            அமைதியை !
                                                                                            
                                                       
             
                      24/07/2011  சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்

Sep 11, 2011

காதல்


பரத நாட்டியமாய் ....
பரவசப்படுத்தும் !
தெளிந்த நீரோடையாய் 
அமைதியில் ஆழ்த்தும் !

கொஞ்சும் தமிழாய் வந்து 
கவிதைகள் படிக்கும் !
குதூகல குழந்தையாய் மனம் 
மகிழ்ச்சியில் மிதக்கும் !

நேரம் கடப்பது 
நினைவுகளில் தப்பும் 
நினைவுகளும் சில நேரம் 
குழம்பியே கிடக்கும் !

பூட்ட நினைத்தால் 
எரிமலை வெடிக்கும் !
பொங்கி எழுந்து 
புயலாகவும் அடிக்கும் !

ஞானியை போல 
உறவையும் துறக்கும் !
உறக்கம் என்பதும் 
மறந்தே கிடக்கும் !

காதல் கைகோர்த்தால் 
கவலைகளை மறக்கும் !
காலம் பிரித்தால் 
உயிரையும் துறக்கும் !


25-12-2010 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்.

Sep 9, 2011

வையகமும் வசப்படும்



                   

ஒட்டிய கன்னம் 
ஒல்லி தேகம் 
ஒட்டு துணி .....
மதிக்கும் படியாகயில்லை 
தேகம் !  
ஆனால் ,
உலகம் தலை வணங்குகிறது 
மகாத்மாவை !

வெள்ளையுடை 
வெளுத்த கூந்தல் 
சுருங்கிய தோல்
அழகில்லா மேனி ....
ஆனால் ,
மயங்கி நின்றது மானுடம் 
அன்னை தெரசாவின் 
அன்புக்கு !

முரட்டு தலை 
பிதுங்கிய விழி 
எடுப்பான பல் 
பயனற்ற செவி 
முரடனின் தோற்றம்
ஆனால் ,
உலகம் 
வியந்து நின்றது 
தாமஸ் எடிசனிடம் !

புரிகிறது ....
அன்பும் 
அறிவும் 
அகிம்சையும் 
இருந்தால்
இவ் வையமும் 
நம் வசம் !  

 2-01-2011 சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இடம் பெற்ற எனது ஆக்கம்